ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா- இதெப்படி சாத்தியம் என வியக்கிறது மருத்துவ உலகம்

புத்தம் புதிதாய் இந்த மண்ணில் வந்து பிறக்கிற ஒவ்வொரு குழந்தையும் ஆச்சரியம், நம்பிக்கை, கனவு என எல்லாவற்றின் தொடக்கமுமாக அமையும் என்று உருகுவார் அமெரிக்க பெண் எழுத்தாளர் எடா ஜே லேசன்.

அப்படி ஒரு குழந்தை இந்த மண்ணில் வந்து உதித்த சில மணித்துளிகளில் உயிர்க்கொல்லி வைரசான கொரோனா பாதிப்புக்கு ஆளானால்?

மனது கனத்துப்போகிறது. கொலைகார வைரஸ் என்று கொரோனாவை சொல்வது சரிதான்.

இப்படித்தான் மெக்சிகோ நாட்டில் நடந்திருக்கிறது. அங்கு ஒரு பெண்ணுக்கு ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகள் அடுத்தடுத்து பிறந்தன. ‘ட்ரிபுள் டமாக்கா’ என்று அந்தக் குழந்தைகளின் தாயும், தந்தையும் உற்சாகத்தில் மிதக்க, அந்த உற்சாகம் சில மணித்துளிகளில் பறிபோய் விட்டது.

அந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. இதுவரை உலகில் எங்கும் இப்படி நடந்ததாக தகவல் இல்லை என்று மெக்சிகோ சுகாதார அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள்.

ஏற்கனவே மெக்சிகோவில் 1 லட்சத்து 85 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு தொற்று இருக்கிறது, 22 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்டோர் பலியாகி இருக்கிறார்கள்.

இந்த அதிர்ச்சியில் உறைந்து போயுள்ள மெக்சிகோ சுகாதார துறைக்கு இப்படி ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கும் கொரோனா வைரஸ் தொற்று இருப்பது புரியாத புதிராக இருக்கிறது. அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியாகவும் அமைந்துள்ளது.

பொதுவாகவே புதிதாக பிறந்த குழந்தைக்கு அதே நாளில் கொரோனா வைரஸ் தொற்றுவது இல்லை. இது கேள்விப்படாத ஒன்றாகவே இருக்கிறது. ஒருவேளை கொரோனா தொற்று உடையவர்கள் அந்த குழந்தையை பார்க்க வந்து, தூக்கி வைத்து கொஞ்சி இருந்தால் பாதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

ஆனால் இந்தக் குழந்தைகளை அப்படி யாரும் நெருங்கியதாக தகவல் இல்லை.

உரிய நாளுக்கு முன்பாகவே இந்தக் குழந்தைகள் கடந்த 17-ந் தேதி பிறந்தனவாம்.

அங்குள்ள சான் லூயிஸ் பொட்டோசி மாகாணத்தில் உள்ள ஆஸ்பத்திரியில்தான் 2 ஆண் குழந்தைகள், ஒரு பெண் குழந்தை என ஒரே பிரசவத்தில் 3 குழந்தைகளை அந்த இளம்தாய் பெற்றெடுத்திருக்கிறார்.

ஒரு ஆண், ஒரு பெண் என இரு குழந்தைகள் உடல்நிலை தேறி வருகின்றன. ஸ்திரமாக இருக்கின்றன. மற்றொரு ஆண் குழந்தைக்கு சுவாச பிரச்சனையால் தொடர் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த குழந்தைகளுக்கு தாயின் கருப்பையில் இருந்தபோது, கர்ப்ப காலத்தில் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா வைரஸ் பரவி இருக்க முடியுமா என்று மருத்துவ நிபுணர்கள் ஆராய்ந்து வருகிறார்கள்.

இதுபற்றி மாகாண சுகாதார கமிஷனின் செய்தி தொடர்பாளர் கூறும்போது, “ஒரே பிரசவத்தில் பல குழந்தைகள் பிறந்து அந்த குழந்தைகள் அனைவருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு என்பது இதுவரை கண்டறியப்படவில்லை. எனவே இது குறித்து விசாரித்து வருகிறோம்” என்கிறார்.

புதிதாக பிறந்த குழந்தைகளில் மிக குறைந்த எண்ணிக்கையில், பிறந்த பிறகு வைரஸ் பாதிக்கலாம் என அறியப்படுகிறது. ஆனால் இப்படி 3 குழந்தைகள் பிறந்து அவர்கள் அனைவருக்கும் கொரோனா என்பது நம்ப முடியாத அதிசயமாக இருப்பதாக சுகாதார அதிகாரிகள் வியந்து போகிறார்கள்.

மாகாண சுகாதார மந்திரி மோனிகா லிலியானா ரேஞ்ச் மார்டினெஸ் இதுபற்றி கூறுகையில், “அவர்கள் பிறந்த தருணத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதற்கு சாத்தியம் இல்லை” என்கிறார்.

அந்தக் குழந்தைகளுடைய தாய், தந்தைக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் இல்லை. அவர்கள் அறிகுறியற்று கொரோனா தாக்குதலுக்கு ஆளாகி இருக்கிறார்களா என்று கண்டறிய பரிசோதனை நடத்தப்படுகிறது.

சமீபத்தில் அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழக மருத்துவ கல்லூரி விஞ்ஞானிகள்தான் முதன்முதலாக பிறந்த குழந்தைக்கு தாயின் நஞ்சுக்கொடி வழியாக கொரோனா தொற்று பரவியதை கண்டறிந்து கூறி இருந்தார்கள். அதே நேரத்தில் தாய்க்கும், குழந்தைக்கும் ஆபத்து ஏற்படாது என்று சொல்லி இருக்கிறார்கள்.

இங்கே குறிப்பிடத்தக்க ஒரு அம்சம், கொரோனா வைரஸ் தொற்று இதுவரை கருச்சிதைவை ஏற்படுத்தும் என்பதற்கோ, கர்ப்பத்தில் கரு வளர்கிறபோது கொரோனா தொற்று பாதிக்கலாம் என்பதற்கோ ஆதாரம் இல்லை என்று மருத்துவ விஞ்ஞானிகள் சொல்வதுதான். இந்த குழந்தைகள் நலம் பெற வேண்டும், சுக வாழ்வு வாழ வேண்டும் என்பது மெக்சிகோவின் பிரார்த்தனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த மனித குலத்தின் பிரார்த்தனையுமாக இருக்கிறது. சுய நலமற்ற பிரார்த்தனைகள் இறைவனின் செவிகளை எட்டும். நம்பிக்கை வளர்ப்போம்.

One thought on “ஒரே பிரசவத்தில் பிறந்த 3 குழந்தைகளுக்கு கொரோனா- இதெப்படி சாத்தியம் என வியக்கிறது மருத்துவ உலகம்

 1. Hey there! Quick question that’s completely off topic.
  Do you know how to make your site mobile friendly?
  My weblog looks weird when viewing from my iphone. I’m trying
  to find a template or plugin that might be able to fix this issue.
  If you have any recommendations, please share. Thank
  you!

Leave a Reply

Your email address will not be published.

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected. Write your own content !!